பால் ஏ.டி.எம்: தமிழக பட்டதாரியின் அசத்தல் முயற்சி
பணம் வரும் ஏடிஎம் மிஷின் குறித்து நாம் அனைவரும் அறிந்துள்ளோம் ஆனால் பால் கொட்டும் ஏடிஎம் மெஷின் ஒன்றை தமிழக வேளாண் பட்டதாரி ஒருவர் நிறுவி சாதனை செய்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரி முருகன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் சமீபத்தில் டென்மார்க் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது அங்கு பால் எடிஎம் இருப்பதும், மக்கள் ஏடிஎம்மில் பணம் போட்டு பாலை பாத்திரத்தில் பிடித்துக் கொண்டு செல்வதையும் பார்த்துள்ளார். இதனையடுத்து இதே போன்ற கருவியை நம்மூரிலும் ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
இந்த இயந்திரம் குறித்த தொழில் நுட்பத்தை கற்று வந்த முருகன், ரூபாய் 4 லட்சம் மதிப்பில் அரூர் நான்கு ரோடு பகுதியில் சொந்தமாக ஒரு பால் ஏடிஎம் எந்திரத்தை நிறுவியுள்ளார்.
300 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பால் ஏடிஎம்-இல் ஒரு லிட்டர் பால் 36 ரூபாய்க்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேவையான அளவு பாலுக்கு ஏற்றவாறு பணத்தைச் செலுத்தினால் பால் கொட்டும். அதனை பாத்திரத்தில் நாம் பிடித்துக் கொள்ளலாம். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பணம் மட்டுமின்றி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பெற்றுக்கொள்ளலாம்
இந்த நிலையில் இதேபோன்ற பால் ஏடிஎம் இயந்திரங்களை தமிழகம் முழுவதும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்