அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் தங்கள் பிள்கைள் பேச வேண்டும் என விரும்பி பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் அதுவும் மெட்ரிக் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். இதனால் அரசு பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அரசு பள்ளியிலும் ஆங்கிலம் பேசும் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்கிழமை இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்புகிறார்கள் என்றும். எனவே அதனை குறைத்து அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலம் பேசும் பயிற்சியை கற்பிப்பதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார்.