சென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்தது மழைநீர்.. வியாபாரம் டல்!

சென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்தது மழைநீர்.. வியாபாரம் டல்!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்குள் நீர் புகுந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக் கடலில் கியார் என்ற புயல் உருவானது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அரபிக் கடலில் குமரி கடல் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாகியுள்ளது.

அதற்கு மஹா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இரவு உருவானது. இதனால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அலுவலகம் செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரல், அண்ணாநகர், முகப்பேர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கோயம்பேடு, வில்லிவாக்கம், தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு பகுதியில் உள்ள கடைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் காய்கறி, பூ, பழம் வாங்க வருவோரின் எண்ணிக்கை குறைந்தது.