டிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு

டிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு

சென்னை:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.21.58 கோடியாக உயர்ந்துள்ளது.

டிஎன்பிஎல் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த ஜூலை - செப்டம்பர் காலத்தில் ரூ.21.58 கோடியாக உயர்ந்துள்ளது.நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந் நிறுவனத்தின் வருவாய் ரூ.783.89 கோடியாகக் குறைந்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,014.07 கோடியாக இருந்தது.

அதேவேளையில், ஒப்பீட்டுக் காலத்தில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.10.15 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.33.42 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.6.52 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.21.58 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,744.52 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,949.31 கோடி வருவாய் ஈட்டியிருந்தது.

அதேசமயம், ஒப்பீட்டுக் காலத்தில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.48.99 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.147.70 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.31.21 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.98.67 கோடியாகவும் இருந்தன.

கணக்கீட்டுக் காலாண்டில் டிஎன்பிஎல் நிறுவனத்தின் காகித உற்பத்தி 1,08,752 டன்னாகவும், காகித அட்டையின் உற்பத்தி 42,516 டன்னாகவும் இருந்தது என டிஎன்பிஎல் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.