நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம் - 'ஐஎச்எஸ் மார்க்கிட்' நிறுவனம்

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம் - 'ஐஎச்எஸ் மார்க்கிட்' நிறுவனம்

இந்தியா தற்போது பொருளாதாரரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களின் நுகர்வுத் திறன் குறைந்து இருப்பதால் உற்பத்தியும் குறைந்து உள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. வேலை இல்லா திண்டாட்டமும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து 'ஐஎச்எஸ் மார்க்கிட்' நிறுவனம் கூறுகையில், முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. தொழில்துறையில் தொடர்ந்து தேக்கநிலை காணப்படுகிறது. வங்கிகளின் வாராக்கடன் காரணமாக கடன் வழங்குவதை குறைத்துள்ளதால் நிதி சுழற்சி ஏற்படவில்லை. தொழில் செய்ய பணம் இல்லாமல் சிறு வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன்றனர்.

பொருளாதார சுழற்சிக்காக வங்கி கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளபோதிலும் அதன் பயன் தொழில்துறைக்கு சென்று சேரவில்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.