தமிழகத்தின் மிகப் பெரிய மாரத்தான் போட்டி 8வது முறையாக 2020 ஜனவரி 5ல் நடைபெறகிறது!
தமிழகத்தின் மிகப் பெரிய மாரத்தான் போட்டியான 'சென்னை மாரத்தான்' ஜன.5ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து பந்தய இயக்குநர் ஏ.பி.செந்தில்குமார், ஸ்கெச்சர்ஸ் பெர்பார்மன்ஸ் தலைமை செயல் அலுவலர் ராகுல் வீரா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தன்னார்வ நிறுவனமான தி சென்னை ரன்னர்ஸ், அமெரிக்க பெர்பார்மன்ஸ் மற்றும் லைப் ஸ்டைல் நிறுவனம் ஆகியவை இணைந்து 'தி ஸ்கெச்சர்ஸ் பெர்பார்மன்ஸ் சென்னை மாரத்தான்' என்ற பெயரில் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளன. 2006ம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி, தற்போது 8வது முறையாக 2020 ஜனவரி 5ல் நடைபெற உள்ளது. இந்திய, சர்வதேச வீரர், வீராங்கனைகள் உட்பட 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு மாரத்தான் (42.195 கிமீ), 20 மைலர் (32.186 கிமீ), அரை மாரத்தான் (21.097 கிமீ) மற்றும் 10 கிமீ என 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் இந்தப் போட்டி அதிகாலை 4 மணிக்கே தொடங்கி விடும். மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சம். பெருநகர சென்னை காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆதரவுடன் இந்த பந்தயத்தை நடத்த உள்ளோம். சிறுசேரி அருகே உள்ள கழிப்பத்தூர் ஏரியை சீரமைக்கவும் சென்னை ரன்னர்ஸ் திட்டமிட்டுள்ளது.