தங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..!
சென்னை தலைமை செயலக காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன், கடந்த 8-ஆம் தேதியன்று, தனது ஆட்டோவில் தவற விடப்பட்ட ஒரு சூட்கேசை தலைமைச் செயலக காலனி காவல் நிலைத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் ஒப்படைத்த அந்த சூட்கேசில் தங்க, வைர நகைகளும் ரொக்க பணமும் மற்றும் விலையுர்ந்த வாட்ச் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளன. போலீசார் விசாரணையில், அந்த சூட்கேஸ் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீத்து என்ற பெண்ணுக்கு சொந்தமானது என தெரியவர அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தன்று மிண்ட் பகுதியில் இருந்து அந்த பெண்ணை ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்ட ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன், அந்த பெண் சீட்டின் பின்புறம் விட்டுசென்ற சூட்கேஸை கவனிக்கவில்லை. அந்த பெண்ணும் சூட்கேஸை மறந்து ரயில் ஏறி ராஜஸ்தான் சென்றுவிட்டார்.
இதனிடையே பத்மநாபன் ஆட்டோவில் இருந்த சூட்கேஸை கவனித்ததும் அதில் என்ன இருந்தது என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அருகில் இருந்த தலைமை செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்துவிட்டார்.
ராஜஸ்தான் சென்ற பிறகு தான் சென்னையில் உள்ள தனது உறவினர்கள் மூலம் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததினால், தலைமை செயலக காலனி போலீசாரால் சூட்கேஸுக்கு உரியவரை கண்டுப்பிடிக்க முடிந்தது. அந்த பெண்ணின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் சூட்கேஸை ஒப்படைத்தனர்.
தனது ஆட்டோவில் வந்த பயணி விட்டு சென்ற சூட்கேஸில் விலையுர்ந்த பொருள் இருக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் அது மற்றவருடையது உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன் செயல் பாராட்டத்தக்கது...