குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது!!
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி புனிதத் தலமாக பண்டைய காலம் முதல் திகழ்ந்து வருகிறது. திருக்குற்றால அருவியில் அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம் உண்டு. அடுத்து திருக்குற்றால நாதர் ஆலயத்தில் அகத்திய பெருமான் திகழ்கிறார். இங்கே கார்த்திகை சோமவாரத்தில் பெண்கள் அதிகாலை முதல் தரிசனத்துக்கு வந்து 10 மணி வரை அருவியில் நீராடி அருகிலுள்ள விநாயகர் கோவிலில் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துகின்றனர். குழந்தை வரம் தரும் வழிபாடு என்று பெண்களிடம் நம்பிக்கை கொண்ட இந்த வழிபாட்டில் கார்த்திகை மாதம் அரசமரம் அடியில் உள்ள விநாயகரை தொழுது நாகர்களுக்கு மஞ்சள் பூசி அபிஷேகம் செய்து வழிபட்டுச் செல்கின்றனர்
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்றைய தினம் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.