பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில் தகவல்
புவி வெப்பமயமாதல் போன்ற பருவநிலை மாற்றம் காரணமாக பறவையினங்களின் உடலமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புவி வெப்பமயமாதலால் கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி, பறவையினங்களும் அழிவின் விளிம்புக்கு தள்ளப்படுகின்றன. 40 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 52 வகையான சுமார் 70,716 பறவை மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், புவி வெப்பமயமாதலால் பறவைகள் மேலும் மேலும் சிறிதாக பிறப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பறவைகளின் இறக்கைகள் மட்டும் வளர்ந்து, அவற்றின் உடல் சுருங்கிக்கொண்டே வருவது மெக்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கம், காலநிலை மாற்றம், உணவு உள்ளிட்ட காரணங்களுக்காக பறவைகள் இடம்பெயருவது வழக்கம். அப்படி பறவைகள் இரவு நேரத்தில் இடம்பெயரும்போது கட்டடங்கள் மற்றும் ஜன்னல்களில் மோதி உயிரிழக்கின்றன. அப்படி 1978 முதல் 2016 வரை உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அந்தப் பறவைகளின் எலும்பின் நீளம் மற்றும் உடல் ஆகியவற்றின் வளர்ச்சி 2.4 சதவீதம் குறைந்தும், இறக்கைகளின் நீளம்1.3 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. வெப்பமயமாதலே பறவையின் உடல் அளவு குறைந்ததற்கு காரணம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய உடல் அளவு கொண்டிருப்பதால் பறவைகளால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்றும், இதனால் இனப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக இடம்பெயர முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெப்பமயமாதல் காரணமாக ஆல்பைன் வகை ஆடுகள் சிறிய அளவில் பிறப்பதாகவும், பல்லி வகையை சேர்ந்த சாலமண்டர்களின் உடல் அளவு சுருங்கி இருப்பதும் கண்டறியப்பட்டது.