ஜிஎஸ்டி விலக்குப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆலோசனை
புது தில்லி: ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கப்பட்ட பொருள்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்குமாறு மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் பரிந்துரைத்துள்ளன. குறிப்பாக சேவைகள் பிரிவில் விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் சில மாநிலங்கள் வரி விதிப்பை எளிமையான மூன்று அடுக்கு வரி விதிப்பு அமைப்பாக மாற்றவும் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.
வருவாய் அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ் வரி விதிப்பு அமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த யோசனைகளை தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழு, நிர்வாக நடைமுறைகளைக் கடுமையாக்குவதுடன் ஜிஎஸ்டி வரி அமைப்பில் மாற்றம் கொண்டு வரவும் பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தப் பொருள்களை வரி வரம்புக்குள் கொண்டு வருவது என ஆய்வு செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விலக்கில் உள்ள உயர் வகுப்பினர் பயன்படுத்தும் சில பொருள்கள் வரி வரம்பில் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவை குறையலாம் என்ற எதிர்பார்ப்பில் பல மாநிலங்கள் வரிகளை உயர்த்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், ஆனால் குறைந்தபட்ச வரி விதிப்புப் பிரிவை 5 சதவீதத்தில் இருந்து 8-10 சதவீதமாக உயர்த்த ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான பொருள்கள் 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் பிரிவில் வருவதால் ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புகளை அதிகரிக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த நவ.27ம் தேதி, ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு ஜிஎஸ்டியின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும் படி மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் செயலர் கடிதம் எழுதியிருந்தார்.