பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது

பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது
பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கடும் நிதிப் பற்றாக்குறையில் உள்ள நிலையில் பல்வேறு பொருள்களின் ஜிஎஸ்டி வரி உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்புகள் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீடான 3.3 சதவீதத்தைக் கடந்து 3.5 - 3.8 சதவீதத்தை எட்ட வாய்ப்புள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பல்வேறு பொருள்களுக்கும் வரி வசூலை அதிகரித்து அதன் மூலம் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம் என அரசு எதிர்பார்த்துள்ளது.

டிச.18ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போது 5, 12, 18, 28 ஆகிய நான்கு சதவீதங்களில் வரி விகிதங்கள் உள்ளன. உயர்ந்த பட்ச வரி விகிதமான 28 சதவீதத்தைப் பொருத்தவரை, அதற்கு மேல் சிறப்பு வரியையும் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த சிறப்பு வரி 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வேறுபடுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கடந்த செவ்வாய்க் கிழமை ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் தொடர்பாக இறுதி செய்வதற்காக ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் தொடர்பான வாய்ப்புகள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச வரி விகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்துவது, 12 சதவீத வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரி விகிதங்களை சீரமைப்பது தொடர்பான விரிவான ஆலோசனைகள் ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

மாநிலங்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட வேறு சில நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சில பொருள்களின் மீதான சிறப்பு வரிகளை உயர்த்துவது தொடர்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும், மேலும் வரி விகிதங்களைக் குறைத்து 3 விகிதங்களாக மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்கள் தொடர்பாக மறு ஆய்வு செய்வது மற்றும் சில சேவைகளுக்கு சிறப்பு வரி விதிக்க முடியுமா என்பது தொடர்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - நவம்பர் காலத்தில் பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் 40 சதவீதம் அளவுக்கு மத்திய ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் - நவம்பர் காலத்தில் ரூ.5,26,000 கோடி வருவாய் கிடைக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.3,28,365 கோடி மட்டுமே வசூல் கிடைத்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் 26 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிதித் தேவை அதிகரித்து வரும் நிலையில், இழப்பீட்டு சிறப்பு வரியிலிருந்து கிடைக்கும் நிதி போதுமானதாக இல்லை. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களின் எஸ்ஜிஎஸ்டி கமிசனர்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் எழுதியுள்ள கடிதத்தில் ஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு சிறப்பு வரி வசூல் குறைந்துள்ள நிலையில், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் ஆலோசனை முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருவாயை உயர்த்த உதவும் வகையில், ஜிஎஸ்டி நடைமுறைகள் மற்றும் வரி விகிதங்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக யோசனைகள், தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களிடம் கோரியுள்ளது.