காவல் ஆணையர் அலுவலகத்தில் நுழைந்த 'போலி' போலீஸ் கைது..

காவல் ஆணையர் அலுவலகத்தில் நுழைந்த 'போலி' போலீஸ் கைது..

காவலர் எனக்கூறி போலி அடையாள அட்டையுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குள் நுழைந்த மோசடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற சாம் ஜெபராஜ் என்பவர், தன்னை சாலை பாதுகாப்புக் காவலர் எனக்கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். பின்னர் அவர் காவல் ஆணையரை சந்திப்பதற்காக பார்வையாளர் அறையில் சாம் ஜெபராஜ் காத்திருந்தார்.

இதனிடையே, அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அது போலி அடையாள அட்டை என்பதும், போலி காவலர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் விழாவிற்கு காவல் ஆணையரை அழைத்து வருகிறேன் எனக்கூறி, அதன் முதல்வரையும் சாம் ஜெபராஜ் அழைத்து வந்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. உண்மையில் காவல்துறையில் சாலை பாதுகாப்பு என்ற பிரிவு கிடையாது என கூறப்படுகிறது. இதுவே தெரியாமல் போலி அடையாள அட்டையுடன் வந்ததும் தெரியவந்தது. அதேவேளையில், ஆணையர் அலுவலகத்துக்குள் அனுமதித்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.