2019 உலக அதிர்வலைகள்

2019 உலக  அதிர்வலைகள்

பற்றி எரிந்த உலகின் நுரையீரல்

பிரேசிலில் அதிபராகப் பதவியேற்ற ஜெய்ர் போல்சோனரோ சூழலியல் விரோதப் போக்கைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற சில மணிநேரத்திலேயே, வனக் கொள்கையை வேளாண் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்து, அமேசான் அழிக்கப்படுவதற்கான தொடக்கப்புள்ளியை வைத்தார்.

மேலும், அமேசான் காடுகளை நியாயமான அளவில் பிரேசிலின் பொருளாதாரத் தேவைகளுக்காக சுரண்டிக்கொள்ளலாம் என்று வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் காடழிப்பு 11 ஆண்டுகளாக கணிசமான அளவில் தொடர்ந்து கொண்டு வருகிறது.முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிரெக்ஸிட் தீர்மானித்த முடிவு!

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற பல முறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால், இந்த ஓட்டெடுப்பில் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் பிரதமராகப் பதவியேற்றார்.பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தெரசா மேவுக்கு ஏற்பட்டது போல அதே சிக்கல் போரிஸ் ஜான்ஸனுக்கும் ஏற்பட்டது.

ட்ரம்ப்புக்கு எதிரான பதவிப் பறிப்பு தீர்மானம்

அமெரிக்காவின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் டொனால்ட் ட்ரம்ப், பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது அதிபர் என்ற பட்டியலில் இடம் பிடித்தார். அதிபரின் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுத்ததற்காகவும் இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி திரும்பியது.

அப்போது, இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானம் எப்-16 வகையை இந்திய விமானி அபிநந்தன் மிக் ரக விமானத்தில் விரட்டிச் சென்று அதைச் சுட்டு வீழ்த்தினார்.அதன்பின் விமானம் கோளாறு அடைந்த நிலையில், பாகிஸ்தான் பகுதியில் பாராசூட்டில் குதித்தார். அவரைப் பிடித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 நாட்களில் இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்.