அமித் ஷாவுடன் நடிகை விஜய சாந்தி சந்திப்பு
அமித் ஷாவுடன் நடிகை விஜய சா ந்தி சந்திப்பு
ஐதராபாத்,
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தியும் ஒருவர். இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் 1998-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.
அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி நேற்று விலகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் இன்று பாஜகவில் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக நடிகை விஜயசாந்தி நேற்று டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்புவும் விஜயசாந்தியும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒரே காலகட்டத்தில் அங்கிருந்து விலகியிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.