மின்சார வாகனங்களை கையாள்வதில் கவனம் தேவை அன்புமணி அறிவுரை
மின்சார வாகனத்தையும், அதில் மின்னேற்றம் செய்வதும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம் என்பதால், அதைப் பழகும் வரை அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் மின்சார இருசக்கர ஊர்தியின் சார்ஜர் வெடித்ததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை துரைவர்மா, 13 வயது மகள் பிரீத்தி ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.
மின்சார இரு சக்கர ஊர்தியை சார்ஜரில் இணைத்து விட்டு உறங்கியதால், அதிக மின்சக்தி ஏறியவுடன் அதை தாங்க முடியாமல் பேட்டரி வெடித்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. காவல்துறை விசாரணையின் முடிவில்தான் இதை உறுதி செய்ய இயலும்.
மின்சார இரு சக்கர ஊர்தியும், அதில் மின்னேற்றம் செய்வதும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம் ஆகும். அத்தொழில்நுட்பத்தை அனைவரும் பழகும் வரை மின்னூர்திகளை இயக்குவது, மின்னேற்றம் செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இது குறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று அன்புமணி கூறியுள்ளார்.