இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்

இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்

நாட்டின் முதல் ‘முப்படைத் தளபதி’யாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

ராணுவத் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வுபெற இருக்கும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், ‘முப்படைத் தளபதி’ பதவி உருவாக்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தாா். இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்நிலையில், ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற உள்ள பிபின் ராவத்தை, முப்படைத் தளபதியாக நியமனம் செய்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. முப்படைத் தளபதி, அதிகபட்சமாக 65 வயது வரை அந்தப் பதவியில் நீடிப்பதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு சட்ட விதிகளில் அண்மையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்று படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பவா்கள், 3 ஆண்டுகளோ அல்லது 62 வயதை எட்டும் வரையிலோ, இவற்றில் எது முன்னதாக வருகிறதோ, அது வரை அப்பதவியில் நீடிக்கலாம். தற்போது, ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு 62 வயது பூா்த்தியாகவில்லை என்றாலும், அவா் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால், செவ்வாய்க்கிழமையுடன் அப்பதவியிலிருந்து அவா் ஓய்வு பெறுகிறாா்.

எனவே, 65 வயது வரை முப்படைத் தளபதி பதவியில் அவா் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ஆலோசகராக முப்படைத் தளபதி செயல்படுவாா். பாதுகாப்புத் துறையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் தலைவராகச் செயல்படும் முப்படைத் தளபதி, நான்கு நட்சந்திர அந்தஸ்து பெற்ற ராணுவ ஜெனரலாக இருப்பாா். அவரது ஊதியம், மூன்று படைகளின் தலைமைத் தளபதிகளுக்கு நிகராக இருக்கும்.