உணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவன ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும்

உணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவன ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும்- கமிஷனர் அறிவிப்பு
சென்னை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் ரூ.10 லட்சம் செலவில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்-சிறுமிகள் விளையாடும் மைதானம், பெரியவர்கள் நடைபயிற்சி பாதை மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இந்த பூங்காவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் குடும்பத்து பிள்ளைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது. நவம்பர் மாதம் சென்னையில் போலீஸ் குடும்பத்து பிள்ளைகளுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
உணவு பொருட்கள் பார்சலை வாகனங்கள் வாயிலாக சப்ளை செய்யும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் சிலர் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது, அவர்கள் போலீசாரின் நன்னடத்தை சான்றிதழ்கள் பெறவேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தினகரன், இணை கமிஷனர் சுதாகர் மற்றும் துணை கமிஷனர் தர்மராஜன், எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சேட்டு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.