ஆத்தூர் அருகே முதுமக்கள் தாழி

ஆத்தூர் அருகே முதுமக்கள் தாழி
ஆத்தூர் அருகே முதுமக்கள் தாழி
ஆத்தூர் அருகே முதுமக்கள் தாழி
ஆத்தூர் அருகே முதுமக்கள் தாழி

ஆத்தூர் அருகே முதுமக்கள் தாழி 

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தெடாவூர் என்ற கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது. தெடாவூர் அருகே பச்சைமலைத்தொடரின் சிறு குன்று உள்ளது.இதன் அடிவாரத்தில் தெற்குமணற்காடு என்ற பகுதியும் அருகே ஏரியும், சுவேத நதியும் உள்ளது. தெற்குமணக்காடு பகுதியில் கரட்டுப்பகுதியும்,விவசாய நிலங்களும் உள்ளது.இங்கு அழகுவேல் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.இதன் ஒரு பகுதி கரடாக உள்ளது.சமீபத்தில் பெய்த மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரட்டுப்பகுதியில் இரு இடங்களில் முதுமக்கள் தாழி வெளியே தெரிந்தது. இது பாதி அளவு உடைந்து சிதைந்த நிலையில் காணப்பட்டது.உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் வருவாய் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். செய்தி அறிந்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது பற்றி அவர் கூறியதாவது

    இப்பகுதியில் இரு முதுமக்கள் தாழிகள் பாதி உடைந்த நிலையில் உள்ளது.இதன் உயரம் 5 அடி இருந்திருக்கலாம்.இதன் தடிமன் ஒரு அங்குலம் ஆகும்.இதன் உட்புறமும், வெளிப்புறமும் கருப்பு நிறத்திலும் நடுவில் சிகப்பு நிறத்திலும் உள்ளது.இதனுள் ஒரு சிறு கலயமும், புகை பிடிக்கும் சுங்கான் என்ற கருவியும், எலும்புகளும் இருந்ததாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.முதுமக்கள்தாழியை இப்பகுதி மக்கள் மதமதக்கா சால் என அழைக்கின்றனர். இதன் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதலாம். பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இறந்தவர்களை முதுமக்கள்தாழியில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.இறந்தவர்களை பானைகளில் நேரடியாக வைத்து புதைப்பது மற்றும் இறந்தவர்களின் எலும்புகளை மட்டும் வைத்து புதைப்பது என்ற முறைகள் இருந்துள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் செல்வராஜ் என்பவர் நிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் 5 முதுமக்கள் தாழிகள் இருந்துள்ளன..இவை கல்பதுக்கைகளின் நடுவே பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்தது. பூமிக்கு அடியில் நான்கு புறமும் பலகை கற்களை வைத்து அதன் நடுவே முதுமக்கள் தாழியை வைத்து அதன் மேல் ஒரு பெரிய பலகை கல் வைத்து மூடுவது கல்பதுக்கை ஆகும். நிலத்தை சீர் செய்த போது இந்த முதுமக்கள் தாழிகள் உடைக்கப்பட்டு விட்டன. கல்பதுக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மூடுகற்கள் இன்றும் அங்கு உள்ளது.இப்பகுதியில் இன்னும் சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் இருப்பதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப்பகுதியானது ஒரு ஈமக்காடாக இருந்திருக்கலாம். இதன் அருகே சுவேதா நதி பாய்வதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது மக்கள் வாழ்விடப்பகுதியாகவும் இருந்திருக்கலாம்.

ஆறகளூர்பொன்வெங்கடேசன்