சீன மோதலில் தமிழக வீரர் திருவாடானை பழனி வீரமரணம்
லடாக்கில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ அதிகாரி உள்பட மூன்று பேரில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரும் ஒருவர் என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில், ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி(40) என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பழனி உயிரிழந்ததாகவும், இவரது உடல் நாளை 17.06.2020 அன்று சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்தில் இராணுவ மரியாதையுடன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா என்ற மகனும்,திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.