வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை

வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை
Rs 6 crore jewells looted at Thiruvallur bank

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் சாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் ஆயில் மில் என்றொரு பகுதி உள்ளது.

அங்குள்ள 3 மாடி கட்டிடத்தில் கீழ் தளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும், முதல் தளத்தில் “பேங்க் ஆப் இந்தியா” கிளையும் செயல் பட்டு வருகிறது. அந்த வங்கியின் அருகில் மற்றொரு வங்கியும் 4 ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. இந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களுக்கு இரவு நேர காவலாளிகள் இல்லை. அதைப் பயன்படுத்தி நேற்றிரவு மர்ம மனிதர்கள் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.

முதல் தளத்தில் உள்ள அந்த வங்கிக்கு செல்ல, கீழ் தள சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் பாதை உள்ளது. மாலையில் வங்கிப் பணிகள் முடிந்ததும் அந்த பாதையை “‌ஷட்டர்” மூலம் மூடி விட்டு செல்வார்கள்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் வரைதான் வங்கிப் பணிகள் நடந்தது. அதன் பிறகு ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் வங்கிக்கு ஊழியர்கள் வந்தனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டர் திறந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

பதட்டத்துடன் வங்கி உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர்கள் அமர்ந்து பணிபுரியும் இடங்களில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. கேஷியர் அறையும் உடைக்கப்படவில்லை.

வங்கி ஊழியர்கள் அவசரம், அவசரமாக நகைகள் உள்ள பெட்டகம் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெட்டகங்கள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகைப் பெட்டகங்கள் அனைத்தும் கள்ளச் சாவிப் போட்டு திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அடகு நகைகள் அனைத்தையும் மர்ம மனிதர்கள் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

இந்த கொள்ளை குறித்து பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சேகர் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கொள்ளை போன நகைகளை வைத்திருந்த பெட்டகத்தின் சாவிகள் அனைத்தும் துணை மேலாளர் ஒருவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாவிகள் அனைத்தும் அவரிடம் பத்திரமாக உள்ள நிலையில் மர்ம மனிதர்கள் கள்ளச் சாவியை பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 624 பேர் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 32 கிலோ அளவுக்கு அடகு நகைகள் இருந்தன. அந்த நகைகள் அனைத்தும் பறிபோய் விட்டன.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Rs 6 crore jewells looted at Thiruvallur bank