பெண்கள் பாதுகாப்பிற்காக நியூ டெக்னிக் ஷூ அறிமுகம்!
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத் பகுதியில் உள்ள ஓர் எஞ்சினீயரிங் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெண்கள் தங்களை பாதுகாக்க புதிய டெக்னிக் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
பெண்கள் அணியும் ஷூக்களில் டிரோன் பாதுகாப்பு அமைப்புடன் கூடிய ஜிபிஎஸ் ஒன்றினையும் வைத்து, அதன் மூலம் அபாய ஒளி எழுப்பும் விதமாகவும் செய்துள்ளனர்.
இந்த புதிய முயற்சி நடைமுறைக்கு வந்தால் நிச்சயம் அனைத்து பெண்களும் இரவில் கூட தனியாக பாதுகாப்புடன் செல்வதுபோல் உணருவார்கள் என இதனை தயார் செய்த மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஷூவினை தயாரித்த மாணவர்களுள் ஒருவரான திவாகர் ஷர்மா கூறியதாவது:
இந்தியாவை பொருத்தவரை பெண்களுக்கு கற்பழிப்பு, பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே தான் இந்த புதிய முயற்சியை கையாண்டோம். இதில் டிரோன் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஷூவின் உள்ளே சிறிய பட்டன் ஒன்று உள்ளது.
யாரேனும் தாக்க வரும்போது லேசாக அதனை அழுத்தினால் போதும், அது ஷாக் அடிப்பதுபோல் அதிர்வை ஏற்படுத்தும். அபாய ஒளியும் எழுப்பும்.
இதன்மூலம் அருகில் வசிப்பவர்கள் வந்து அப்பெண்ணை காப்பாற்ற உதவும். இதனை வைத்து பெண்கள், தங்களை தாக்க வருபவர்களிடமிருந்து எளிதாக தப்பிக்கலாம்.
இதுமட்டுமின்றி டிரோன் அமைப்பின் மூலம் அந்த பெண் எந்த பகுதியில் இருக்கிறாரோ, அந்த லொகேஷன் அவரது வீட்டாருக்கும், போலீசாருக்கும் சென்றுவிடும். மேலும் சிக்னலையும் அனுப்பும்.
ஒருமுறை இந்த சிக்னல் அனுப்பப்பட்டுவிட்டால், அந்த பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு ஜிபிஎஸ் மூலம் டிரோன் பறக்க ஆரம்பித்துவிடும்.
மேலும் இந்த டிரோன், கேமிரவில் நடந்த அனைத்தையும் வீடியோவாக எடுத்துவிடும். இதன் மூலம் போலீசார் அப்பெண்னை தாக்க முயன்றவரை எளிதில் அடையாளம் கண்டு விசாரணை நடத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.