இனிமையான குரலால் இதயங்களை வசீகரித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
இனிமையான குரலால் இதயங்களை வசீகரித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
சென்னை,
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தியவர். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முக திறமை கொண்ட சாதனையாளர். அனைவருடனும் கனிவுடன் பழகுபவர் என்பதால், எல்லோராலும் விரும்பப் பட்டவர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்ததால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி எக்மோ கருவிகள் பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்று டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதற்கு பலன் அளிக்கும் வகையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு கடந்த 4-ந் தேதி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்று முன்தினம் மாலை திடீரென்று மோசம் அடைந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவருடைய மகன் எஸ்.பி.பி.சரணின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குனருமான வெங்கட்பிரபு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று மதியம் 1.07 மணி அளவில் பதிவிட்டார்.
பின்னர் எஸ்.பி.பி.சரணும் தனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்துவிட்ட தகவலை நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று மதியம் 1.45 மணி அளவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் மிக தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.அவரது உயிரை காப்பாற்ற எங்களுடைய மருத்துவ குழு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மதியம் 1.04 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது” என்று கூறப்பட்டு இருந்தது. 52 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
திரையிசை வானில் கொடிகட்டி பறந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தது பற்றிய தகவல் அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இல்லத்தின் முன்பு திரையுலக பிரமுகர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்-பாடகிகள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிய தொடங்கினர். கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர்.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நேற்று மதியம் 3.50 மணி அளவில் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., நடிகர்கள் பிரசன்னா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, இசையமைப்பாளர் தீனா, இயக்குனர் சமுத்திரகனி, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர்கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான பொதுமக்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிஅளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவரது உடல் இன்று காலை 8 மணி அளவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு இந்திய திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஏராளமானோர் சமூக வலைத்தளத்தில் இரங்கல்பதிவுகளை வெளியிட்டுஉள்ளனர்.