நாளை 2020 ஐபிஎல் ஏலம்

நாளை 2020 ஐபிஎல் ஏலம்

2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்கும் புது வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. 
இந்த ஏலத்தில் மொத்தம் 332 வீரர்கள் பதிவு செய்துள்ளனர், அவர்களில் 186 பேர் இந்திய வீரர்கள் ஆவர், இதர 146 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் இம்முறை மொத்தமுள்ள 8 அணிகளையும் சேர்த்து மொத்தம் 73 வீரர்களின் தேர்வு மட்டுமே இருக்கப்போகிறது, அவற்றில் 29 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.


ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் ஆகியோர் மட்டும் அதிகபட்சமாக ரூ.2 கோடி ஏலத்தொகையை பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.42.70 கோடி இருப்புத் தொகை கொண்டுள்ளது. எனவே அந்த அணி இவர்கள் இருவரையும் ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது. 2-ஆவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.35.65 கோடி இருப்புத் தொகை உள்ளது. 

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.28.90 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் ரூ.27.90 கோடியும் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணியிடம் ரூ. 27.85 கோடியும் இருப்புத் தொகை உள்ளது. எனவே புதிய வீரர்கள் தேர்வில் இந்த அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.