அண்ணாவின் தம்பி கலைஞரின் தோழன் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார்...

அண்ணாவின் தம்பி  கலைஞரின் தோழன் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார்...

அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு திசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா ஆகும். 

இவர் பேராசிரியர், இனமானப் பேராசிரியர் என அழைக்கப்பட்டார். இவர் தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர்.இவர் 40 க்கும் மேற்பட்ட அழகுராணி ,விடுதலைக் கவிஞர், தமிழ்க்கடல் போன்ற  நூல்கள் எழுதியுள்ளார்.கல்யாணசுந்தரனார் காங்கிரஸ்காரராகவும் இருந்ததால் பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பிறகு அதிலும் இணைந்து பணியாற்றினார் கல்யாணசுந்தரம்.அவர் வாழ்ந்த பகுதியில், அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டங்களுக்குப் பெரியாரும் அண்ணாவும் வர, அப்போதே அவர்களைச் சந்திக்கும் அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது சிறுவன் ராமையாவுக்கு.

1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அன்பழகனுக்கும் கருணாநிதிக்கும் அறிமுகம் கிட்டுகிறது. தன் ஊரில் நடக்கும் கூட்டங்களுக்கு அன்பழகனை, கருணாநிதி பேச அழைக்க இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். அந்த நட்பு கருணாநிதி மறையும் வரையிலும் கிட்டத்தட்ட 74 ஆண்டுகள் நீடித்தது. தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தந்த அறிவுரையின் படி பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே தான் நடத்தி வந்த, `புதுவாழ்வு' இதழின் மூலம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பி வந்தார் 

1957-ல் தி.மு.க பங்கேற்ற முதல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்பழகன்.1960-ல் தி.மு.க செயலாளராக பொறுப்பேற்றார் .தொடர்ந்து சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஒருமுறை, நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறை, சட்டமன்ற உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராகவும் மக்கள் பணியாற்றிருக்கிறார்.இவர் நிதித்துறை அமைச்சராக இருந்த பொது தான் 1  ரூபாய் அரிசி கொண்டு வர பட்டது.

கருணாநிதியும் அன்பழகனின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.கருணாநிதி, அன்பழகன் நட்பென்பது தனிப்பட்ட இரு மனிதர்களின் நட்பாக மட்டுமல்லாமல், திராவிட இயக்கக்கொள்கையைக் காத்திடும் நட்பாக, தி.மு.கழகத்தை காத்திடும் நட்பாக, தமிழக மக்களின் நலனை மேம்படுத்தும் நட்பாகவே கடைசி வரையிலும் இருந்தது. அன்பழகன் எனும் சுயமரியாதைக்காரனின் வாழ்வில் கருணாநிதியுடனான நட்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

பேராசிரியரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று மாலை நடைபெற இருக்கிறது.