டி20 உலக கோப்பையை வெல்வது யார்?

டி20 உலக கோப்பையை வெல்வது யார்?
டி20 உலக கோப்பையை வெல்வது யார்?

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

இதன் இறுதிப்போட்டி துபாயில் நாளை (14-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது. இதற்கு முன்பு 2010-ல் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

5 தடவை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற அந்த அணி தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவரில் சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருந்தது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி சம பலத்துடன் திகழ்கிறது.

பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 அரை சதத்துடன் 236 ரன் எடுத்துள்ளார். மேத்யூ வாடே, ஸ்டோனிஸ் போன்ற அதிரடி வீரர்களும் இருக்கிறார்கள். ஸ்டீவ் சுமித், மிச்செல் மார்ஷ் ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள்.

பந்துவீச்சில் ஆடம் சம்பா (12 விக்கெட்), ஸ்டார்க் (9), ஹாசல்வுட் (8) தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

நியூசிலாந்து அணி முதல்முறையாக 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

2015-ல் ஒருநாள் போட்டி உலககோப்பை இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. இதற்கு நாளை இறுதிப்போட்டியில் பதிலடி கொடுத்து முதல்முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது.

ஆஸ்திரேலியாவை போலவே நியூசிலாந்தும் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று உள்ளது.

நியூசிலாந்து அணியிலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். மிச்சேல் (197 ரன்), கப்தில் (180 ரன்), கேப்டன் வில்லியம்சன், ஜிம்மி நீசம் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையிலும், போல்ட் (11 விக்கெட்), சோதி (9) சவுத்தி (8) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையிலும் உள்ளனர்.