தமிழகத்திற்கு ‘மஞ்சள் அலர்ட்’ - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்திற்கு ‘மஞ்சள் அலர்ட்’ - இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நந்தனம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.மெரினா கடற்கரை, மயிலாப்பூர், மந்தைவெளி, எம்ஆர்சி நகர் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென் மேற்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம். மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவ மழை வலுவடைவதன் காரணமாகவும் தமிழகம் மற்றும் கேரளாவில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளதாக கூறியுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.அதே போன்று வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கும், கேரளாவில் வரும் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து தினங்களுக்கு நாட்டின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.