கடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி வெப்பநிலை
நீலகிரியில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாகத் தொடங்கினாலும், பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். கடந்த 2019-ம் ஆண்டு அதிக அளவு மழை நாட்களைக் கொண்டிருந்ததால் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக உறைபனி தள்ளிப்போனது. டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் உறை பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பனிப்பொழிவு இல்லை.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்தையும் எட்டியது.
தேயிலைச் செடிகள், மலைக் காய்கறி பயிர்கள், காட்டுத் தாவரங்கள் என அனைத்தும் வெண் முத்துகளாகவும் காட்சியளிக்கின்றன. இந்த ஆண்டு உறைபனி தாமதமாகத் தொடங்கினாலும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
உறைபனி குறித்து காலநிலை ஆய்வாளர்கள் கூறும் போது, "கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகம் காணப்படும்.
வானம் மேகமூட்டம் இன்றி தொடர்ந்து காணப்பட்டால் வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்பு உள்ளது" என்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், "வழக்கத்தைவிட இந்த ஆண்டு உறைபனியின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இரவிலும் அதிகாலையிலும் கடுமையான குளிர் வாட்டுகிறது.