10, 12-ம் வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி

10, 12-ம் வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி

இதுநாள் வரை தமிழ் வழியில் பட்டப்படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப் படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான சட்டத்திருத்த மசோதாவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

கல்லூரியில் தமிழ் வழியில் படித்ததாக சிலர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, இட ஒதுக்கீடு பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்ட தேர்வுகளில் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், அரசு வேலைக்காக பட்டப்படிப்பை தமிழில் படித்ததாகவும் அதைக் கொண்டு, இட ஒதுக்கீட்டில் இடம் பிடித்ததாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டப் படிப்போடு மட்டுமல்லாமல், 10, 12-ம் வகுப்பையும் தமிழில் படித்திருக்க வேண்டும். அவற்றுக்கான சான்றிதழ்களில் தமிழ் வழிக் கல்வியில் படித்தது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல பட்ட மேற்படிப்பைத் தகுதியாகக் கொண்ட தேர்வுகளில், 10, 12-ம் வகுப்புகள், பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் ஆகியவை அனைத்தையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டே தமிழக அரசு நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் அரசு வேலைக்குள் நுழைவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசின் புதிய சட்டத் திருத்த மசோதா முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.