"டான்ஸிங்க் ரோஸ்" பாராட்டு மழையில் நடிகர் ஷபீர் கல்லரக்கல்!
"டான்ஸிங்க் ரோஸ்" பாராட்டு மழையில் நடிகர் ஷபீர் கல்லரக்கல்!
நகரில் எங்கு திரும்பினாலும் ஒரே பேச்சு தான். அது டான்ஸிங்க் ரோஸ் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரின் மனதை வென்றிருக்கிறது டான்ஸிங்க் ரோஸ் கதாப்பாத்திரம். டான்ஸிங்க் ரோஸ் கதாப்பாத்திர வடிவமே மிக சுவாரஸ்யம் மிகுந்தது, வடசென்னை வழக்கை இழுத்து பேசும் குரலும், அசராத உடல்மொழியும், திமிரான நடவடிக்கையும், அனைவரையும் அசரடிக்கும் இக்காதாப்பாத்திரம் ஷபீர் கல்லரக்கல் உடைய நிஜ வாழ்க்கைக்கு நேரெதிரனது. ஆனால் இரண்டு பேருக்கும் ஒத்துப்போகக்கூடிய ஒரே விசயம் அவர்களின் தன்னம்பிக்கையும் லட்சியமும் தான். சமீபத்தில் Amazon Prime Video வில் வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றிருக்கும் "சார்ப்பட்டா பரம்பரை" படத்தில் டான்ஸிங்க் ரோஸ் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல். ஷபீர் திரைத்துறைக்கு புதிதானவர் அல்ல, 2014 லேயே "நெருங்கி வா முத்தமிடாதே" படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். 2016 ல் 54321 படத்தில் எதிர் நாயகன் பாத்திரத்தில் தன் திறமையை நிரூபித்தவர். 'பேட்ட, டெடி அடங்கமறு' திரைப்படங்களில் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தவர். தற்போது டான்ஸிங்க் ரோஸ் பாத்திரம் மூலம் தன் திரை வாழ்வின் உச்சத்தை தொட்டிருக்கிறார். YouTube தளம் டான்ஸிங்க் ரோஸ் வீடியோக்களால் நிரம்பி கிடக்கிறது. ஊரெங்கும் Whatsapp Status ல் டான்ஸிங்க் ரோஸ் தான் வைக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கொழுந்து விட்டு எரியும் தீ போல டான்ஸிங்க் ரோஸ் புகழ் பாடப்பட்டுகொண்டிருக்கிறது. ஆனால் இந்த அத்தனை புகழுக்கும் சொந்தம் கொண்டாட வேண்டிய, ஷபீர் கல்லரக்கல் மிக அமைதியாக தலைவணங்கி, இது அனைத்துக்கும் காரணம் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் தான். அவருக்கு தான் இந்த அத்தனை புகழும் சேரும் என்கிறார். அவர் என்னை இக்கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால், இது எதுவுமே என் வாழ்வில் நிகழ்ந்திருக்காது. இயக்குநர் பா. ரஞ்சித் படத்தில் வரும் ஒவ்வொரு பாக்ஸரையும், தனியான ஸ்டைலுடன் நிஜத்தில் வாழ்ந்த புகழ் மிகு பாக்ஸர்களை மையப்படுத்தியே உருவாக்கினார். ஆர்யாவின் கபிலன் பாத்திரம் முகம்மது அலியை மையப்படுத்தியது, மைக் டைசனுக்கான அர்ப்பணிப்பாக உருவானது தான் வேம்புலி பாத்திரம். என்னுடைய டான்ஸிங்க் ரோஸ் பாத்திரம் இங்கிலாந்தை சேர்ந்த புகழ்மிகு பாக்ஸர் நசீம் ஹமீத் அவர்களை மையப்படுத்தி உருவானது. நசீம் ஹமீத், நடனத்தைப் போலவே இருக்கும், தன் கால் அசைவுகளுக்காகவே பெரும் புகழைப் பெற்றவர். நான் அவரது குத்துச்சண்டை வீடியோக்களை தொடர்ந்து பார்த்து, அவரது உடல்மொழியை எனக்குள் கொண்டு வந்தேன் என்கிறார். ரசிகர்களிடம் டான்ஸிங்க் ரோஸ் பாத்திரம் இத்தனை வரவேற்பு பெற்ற நிலையில், அதற்கு தயாரானது குறித்து கேட்டபோது.. கடைசி நிமிடத்தில் இப்படத்தில் பங்கேற்றதால், 2 மாத நடிப்பு மற்றும் குத்துச்சண்டை பயிற்சிகளை தவறவிட்டு, நேராக படப்பிடிபில் தான் கலந்துகொண்டேன். ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இருவரும் எனது யோசனைகளை ஏற்றுக்கொண்டு, முழு படைப்பு சுதந்திரத்தை அளித்தனர். டான்சிங் ரோஸுக்கு உயிர் கொடுக்க அது எனக்குபேருதவியாக இருந்தது என்றார்.
சிலம்பத்தின் ஒரு வகையான காலடி குத்து வரிசை, கிக் பாக்ஸிங்க், Muay Thai போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். ரசிகர்களை ஓரிரவில் அவர் கவர்ந்துவிடவில்லை அதற்கான அவரின் உழைப்பு மிகப்பெரிது. The Little Theatre ல் நடிகராகவும், ஜோக்கராகவும் மக்களை மகிழ்விக்க பயிற்சி பெற்றவர். பல மருத்துவமனைகளில், தனது கோமாளித்தன நடிப்பு நிகழ்ச்சிகளால், நோயாளிகளின் துன்பங்களை நீக்கி வருகிறார். தவிர, அவர் பார்கூர், களரி போன்ற கலைகளிலும், ஜெயந்தி மாஸ்டர் மற்றும் Black Swan Dance Academy உடன் நடன வகுப்புகள் மற்றும் பவர் பாண்டியன் மாஸ்டருடன் சண்டை வகுப்பு போன்ற பல கலைகளில் பயிற்சி பெற்றவர். மேலும் அவர் மலையேற்றம் செய்யும் டிரக்கர். தற்போது கடலலைகளில் surfing செய்தும் வருகிறார்.
                        
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        