நகைச்சுவை திரைப்படமான 'மிஸ்டர் ராணி' ஜூலை 11 அன்று வெளியாகவுள்ளது

தீபக் சுப்ரமண்யா அசத்தலான நடிப்பில் ஒரு மனிதனின் அடையாளம் மற்றும் கனவுகள் பற்றி பேசும் நகைச்சுவை திரைப்படமான 'மிஸ்டர் ராணி' ஜூலை 11 அன்று லயன்ஸ்கேட் பிளேயில் வெளியாகவுள்ளது
ஒரு மனிதனின் தற்செயலான நட்சத்திர அந்தஸ்து அவனை புகழ்ச்சி, மாறுவேடம் மற்றும் உண்மையான சுயத்தை நோக்கிய தேடலை நோக்கி அவனை தள்ளுகிறது. அவனது பரபரப்பான பயணமே இந்த ஜனரஞ்சகமான நகைச்சுவை திரைப்படத்தில் கதைக் களமாகும்.
திருப்பங்கள் நிறைந்த நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இக்கதையில், நடிப்பு பற்றும் கலை உலகில் தனக்கான அடையாளம், பாலினம் மற்றும் லட்சியத்தை தேடும் ஒரு பாலின-குழப்படி தான் மிஸ்டர் ராணி திரைப்படத்தின் மையக்கருவாகும். ஒரு புதிய அவதாரத்தை ஏற்று தீபக் சுப்ரமண்யா ராஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெற்றோரின் எதிர்பார்ப்புகளின் சுமையை சமாளிக்க ஒரு என்ஜினியரிங் வேலையில் மாட்டிக்கொள்ளும் அவர், விதி வசத்தால் ஒரு நடிகைக்கான ஆடிஷனில் பங்கேற்க நேரிடுகிறது. தானே ஆச்சரியப்படும் வகையில், ராஜா அந்த பாத்திரத்தில் நடிக்கவும் நேரிடுகிறது; ஒரே இரவில், அவரது 'ராணி' கதாபாத்திரம் மூலம் நாடு முழுவதும் பிரபலமாகிறார். அதன் பின் அவரது லட்சியம், சுயத்தை அறிதல் மற்றும் இரண்டு அடையாளங்களுடன் வாழும் வாழ்க்கையால் ஏற்படும் நகைச்சுவை அமளிதுமளிகள் தான் திரைப்படத்தின் திருப்பங்கள் நிறைந்த இதயப்பூர்வமான ஒரு கதையாக அமைந்துள்ளது.
மது சந்திரா இயக்கியுள்ள மிஸ்டர் ராணி திரைப்படத்தினை வயிறு வலிக்க சிரிக்கும் தருணங்கள், ஒரு முக்கியமான சஸ்பென்ஸ், மற்றும் ஆழமான உணர்வுகள் என அனைத்தயும் சரியாக கலந்து உருவாக்கியுள்ளார். மேம்போக்கான ஒரு வாழ்க்கையின் உள்ளே கனவுகளை தேடுவது, சுய அடையாளத்தை கண்டறிவது மற்றும் நாம் நாமாக இருப்பதற்கான தைரியத்தைக் கண்டுபிடிப்பது என்பது பற்றியெல்லாம் பேசும் இந்த இதயப்பூர்வமான கதை – கதாநாயகனின் வாழ்வில் நடந்தால் கூட நமக்கு உத்வேகம் தருவதாக இருக்கும். தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த சிரிப்பு-சரவெடி திரைப்படத்தின் பிரத்யேக பிரீமியரை வரும் ஜூலை 11 ஆம் தேதி லயன்ஸ்கேட் பிளேயில் காணலாம்.
படம் மற்றும் தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசிய கதாநாயகன், நடிகர் தீபக் சுப்ரமண்யா, அவர்கள் “மிஸ்டர் ராணியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இதன் கதை மிகவும் தனித்துவமானது மற்றும் அடுத்து என்ன என்பதை கணிக்க முடியாது. இது ஒரு காமெடி கதை மட்டுமல்ல; இது லட்சியம், சுய அடையாளம் மற்றும் நம்மில் பலர் எதிர்கொண்டு வரும் மன அழுத்தங்களையும் பேசும் ஒரு மிக ஆழமான கதையும் கூட. இதில் எனக்கு பிடித்த மற்றொரு விஷயம் - இப்படம் அதை மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகவில்லை. வெற்றி என்றால் என்ன, சுய வெளிப்பாடு பற்றி நம் சிந்தனைக்கு ஒரு சவால் விடுவதாக இருக்கும். இவை அனைத்தும் நகைச்சுவை மற்றும் நடிப்புக் கலையின் மீதுள்ள காதலுடன் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ராஜாவாக நடிப்பது சவாலாகவும், புத்துணர்வு அளிப்பதாகவும் இருந்தது; குறிப்பாக ராஜா வழக்கத்திற்கு மாறாக புகழை கையாளும் விதம் எனக்கு பிடித்திருந்தது. நகைச்சுவை எக்கச்சக்கமாக இருந்தாலும் கூட, திரையில் உங்களையே உணரவைக்கும் வைக்கும் தருணங்களும் இருக்கின்றன. இந்த சமநிலைதான் படத்தை சிறப்பான படைப்பாக ஆக்கியுள்ளது. இப்போது ரசிகர்கள் மிஸ்டர் ராணியை லயன்ஸ்கேட் பிளேயில் பார்த்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நிச்சயமாகவே இதற்காக நான் நிறைய மாற வேண்டியிருந்தது! 'இன்ஜினியரிங் பையன்' என்ற மோடிலிருந்து விக், மேக்கப் மற்றும் அனைத்தையும் அணிந்துகொண்டு கனவுக் கன்னியான 'ராணி' மோடுக்கு மாற வேண்டியிருந்தது. ஹீல்ஸ் செருப்பில் நடக்கக் கற்றுக்கொள்வதே ஒரு சாகசமாக இருந்தது. நான் சொல்வதை விட நிறைய முறை தடுமாறி விழுந்திருத்க்கிறேன் என்பதே உண்மை. ஆனால் ராணியின் ஷூவை அணிந்து அந்த கதாபாத்திரத்திற்குள் செல்லும் அந்த முயற்சிதான், என்னை கதாபாத்திரத்துடனும் கதையுடனும் இணைக்க நிஜமாகவே எனக்கு உதவியது,” என்றார்.
படம் பற்றி நடிகை பார்வதி நாயர் அவர்கள் பேசுகையில், “மிஸ்டர் ராணி படம் எனக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. கன்னட சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இவ்வளவு நகைச்சுவையான, ரசிக்க வைக்கும் மற்றும் இதயப்பூர்வமான ஒரு கதையை நான் எதிர்பார்க்கவேயில்லை. நான் வழக்கமாக நடித்த தீவிரமான கதாபாத்திரங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதுவே இதில் நடிக்க என்னைத் தூண்டியது. இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் நகைச்சுவையானது, இலகுவான மனம் கொண்டது, மற்றும் நிஜமாகவே வேடிக்கையான கதாபாத்திரமும் கூட. இது நான் முன்பு நடித்த எதைப் போலவும் கிடையாது. அந்த மாற்றமே ஒரு நடிகையாக எனக்கு நம்பமுடியாத அளவிற்கு உத்வேகம் தந்தது. படத்தின் படப்பிடிப்பு அதற்கே உரிய சவால்களுடன் தான் நடந்தது. குறிப்பாக தீபக் பெண் கதாபாத்திரமாக மாறும்போது. அவரது மேக்கப், உடைகள் மற்றும் நடிப்பு என எல்லாமே சிறப்பாக இருந்தது; அவரை செட்டில் கூட பலருக்கு அடையாளம் காண முடியாத தருணங்களும் இருந்தன! இது படத்திற்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தை கொண்டு வந்தது. மிகவும் ஜனரஞ்சகமான மற்றும் இதயப்பூர்வமான படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனது அதிர்ஷடமாக கருதுகிறேன். மக்களும் இப்படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.