’மகா அவதார் நரசிம்மா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மகா அவதார் நரசிம்மா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா’.
தெரிந்த கதை என்றாலும், அதை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், புராண கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.
அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இதுவரை திரைப்படங்களில் நாம் பார்த்த பிரகலாதன் பற்றிய படங்களில் வரும் கதாபாத்திரங்களை இதில் முற்றிலும் மாறுபட்ட வடிவத்திலும், பிரமாண்டமாகவும் உருவாக்கியிருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
ஆன்மீக புராணக்கதைகளை தற்போதைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கும் அஷ்வின் குமார், வெறும் கதையாக மட்டும் இன்றி காட்சி மொழியில் பிரமிக்க வைக்கும் சிறந்த திரை படைப்பாகவும் கொடுத்து, இந்த ’மகா அவதார் நரசிம்மா’ - வை அனைத்து தரப்பினரும் கொண்டாட வைத்திருக்கும் படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.