முன்னா திரைவிமர்சனம்
            சங்கை குமரேசன் நாடோடியாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்தவர். சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் வளரும் அவருக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. ஆனால் பழமை மாறாத அவரது தந்தையோ மகனின் விருப்பத்துக்கு தடையாக இருக்கிறார்.
சங்கை குமரேசன் தனது லட்சியத்துக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதிஷ்டவசமாக அவர் பெரும் பணக்காரராகி நாகரீக வாழ்க்கைக்கும் செல்கிறார். ஆனால் பணம் வந்த பிறகு மனநிம்மதி பறி போகிறது. அதன்பின் இவரது வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசன், தானே இயக்கி நடித்து இருக்கிறார். தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால் நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை சங்கை குமரேசன் வலியுறுத்தி இருக்கிறார்.
நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,ராஜாமணி, சண்முகம், வெங்கட் என பிற கதாபாத்திரங்களும் கதைக்கு ஓரளவிற்கு வலு சேர்த்துள்ளனர். டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சங்கை குமரேசனின் வரிகளில் தத்துவம், காதல் இரண்டுமே பெரியதாக எடுபடவில்லை. சுனில் லாசரின் பின்னணி இசையும் ரவியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
 
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        