'தலைவன் தலைவி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’தலைவன் தலைவி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
புதுமண தம்பதியான விஜய் சேதுபதி - நித்யா மேனன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மனைவி மீது விஜய் சேதுபதி அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கும் நிலையில், திடீரென்று கணவன் - மனைவி பிரிந்து விடுகிறார்கள். அவர்களது பிரிவுக்கு என்ன காரணம் ?, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் அன்பான கணவராகவும், அம்மா மீது அக்கறையுள்ள பிள்ளையாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு தனது தனித்துவமான நடிப்பு மூலம் மெருகேற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால், அது கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக இருக்கிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில் ஓவர் ஆக்டிங்கை குறைத்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழும் வாழ்க்கையை நினைத்து அவர் கவலைப்படும் காட்சிகளில் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
நித்யா மேனன், விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டி நடித்தாலும், அவர் அளவுக்கு பார்வையாளர்களை பதம் பார்க்கவில்லை. கணவருடன் சண்டை போட்டாலும், அவரது பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும், அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை, என்பது சோகம்.
சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு அணுகுண்டுகளாக திரையரங்கை சிரிப்பு சத்தத்தால் சிதறடிக்கிறது. உருவ கேலி செய்வதை முற்றிலும் தவிர்த்திருக்கும் யோகி பாபு, அமைதியான முறையில் வசனம் பேசி விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பதற்காகவே தனியாக பாராட்டலாம்.
நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் - தீபா சங்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் - ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். கமர்ஷியல் படம் என்றாலும் தனித்துவமான பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை சட்டென்று ஈர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறுகிய தெருக்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது.
திரை முழுவதும் நட்சத்திரங்கள், படம் முழுவதும் வசனங்கள் என்று காட்சிகள் நீளமாக இருந்தாலும், படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், முடிந்தவரை சுருக்கமாக சொல்லி, பார்வையாளர்களை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பாண்டிராஜ், குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் சண்டை சச்சரவுகளையும், அதன் மூலம் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.
கணவன், மனைவி இடையே சண்டைகள் வருவதும், சட்டை கிழிவதும் சகஜம் தான், அதற்காக தம்பதியின் நீதிமன்றம் வரை சென்று பிரிவது எல்லாம் வேண்டாத வேலை, என்பதை நகைச்சுவையாக சொன்னாலும், நச்சென்று சொல்லியிருக்கிறார்.
விஜய் சேதுபதி - நித்யா மேனன் தம்பதியின் சண்டைகளோடும், ஓவர் ஆக்டிங்கோடும் நகரும் முதல் பாதி ரசிகர்களை சற்று சலிப்படைய வைத்தாலும், இரண்டாம் பாதியும், யோகி பாபுவின் நகைச்சுவையும் சிரித்து மகிழ வைத்து, ‘தலைவன் தலைவி’-யை கொண்டாட வைத்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.