’ஆண் பாவம் பொல்லாதது’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ஆண் பாவம் பொல்லாதது’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. மகிழ்ச்சியான இந்த தம்பதியின் வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடும் ஈகோ பிரச்சனைகள் வளர்ந்து விவாகரத்து வரை செல்கிறது. மாளவிகா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். ஆனால், ரியோ ராஜ் அவருடன் இணைந்து வாழ விரும்புவதாக சொல்ல, விவாகரத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
என்னதான் சிக்கல் ஏற்பட்டாலும் விவாகரத்து பெற்றே தீருவேன் என்ற பிடிவாதத்தில் மாளவிகா இருக்க, அவருடன் சேர்ந்து வாழ்வதில் ரியோ ராஜ் உறுதியாக இருக்கிறார். இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது ? என்பதை தற்போதைய காலக்கட்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், கலகலப்பாகவும் சொல்வதே ‘ஆண் பாவம் பொல்லாதது’.
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா முழு படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட அனைத்தும் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து காட்சிகளையும் நெஞ்சத்தில் வைத்து ரசிக்க வைத்திருக்கிறது. இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சிறு சிறு சண்டைகள் அனைத்தும், தற்போதைய காலக்கட்ட தம்பதிகள் கடந்து போகும் சம்பவங்கள் என்பதால், பார்வையாளர்களை கைதட்டி, விசில் அடித்து கொண்டாட வைப்பதோடு, இருவரது ஜோடி பொருத்தம் மற்றும் அவர்களது துள்ளல் நடிப்பு, உடல்மொழி ஆகியவை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
வழக்கறிஞராக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த், வழக்கமான நகைச்சுவையோடு செண்டிமெண்டாக நடித்து கலங்கடிக்கவும் செய்திருக்கிறார். வழக்கறிஞராக நடித்திருக்கும் ஷீலாவும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருப்பதோடு, விக்னேஷ்காந்த் போல், பார்வையாளர்களை கலங்கடித்து மனதில் நின்றுவிடுகிறார்.
விக்னேஷின் உதவியாளராக நடித்திருக்கும் ஜென்சன் திவாகரின் அறியாமை மற்றும் அவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சத்தத்தால் திரையரங்கையே அதிர வைக்கிறது.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை பளிச்சென்று படமாக்கி பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.
இளம் தம்பதியின் வாழ்க்கையை மையக்கருவாக வைத்துக் கொண்டு கதை எழுதியிருக்கும் சிவகுமார் முருகேசன் மற்றும் கலையரசன் தங்கவேல், தம்பதி இடையிலான ஈகோ, அதனால் ஏற்படும் விளைவுகளை கலகலப்பான முறையில் காட்சிப்படுத்தி சிரிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் யோசிக்க வைக்கும் விதத்தில் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு, சோசியல் மீடியா என்றால் என்ன ? என்பது கூட தெரியாத பல பெண்கள், திருமணத்திற்குப் பிறகு கணவர்கள் கொடுக்கும் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு சோசியல் மீடியாவில் மூழ்கியிருப்பதும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கலகலப்பான காட்சிகளாக கையாண்டிருக்கும் இயக்குநர் கலையரசன் தங்கவேல், தற்போதைய காலக்கட்ட தம்பதிகளை மட்டும் இன்றி இளைஞர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
படம் பார்ப்பவர்களிடம் பாதிப்பு ஏற்படுத்துவதோடு, அவர்களை கதையோடு தொடர்புபடுத்திக் கொள்ள வைத்திருக்கும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.




