சென்னையில் அதிகாலை முதல் மழை:வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது தமிழகத்தில் பல மாவட்டங்களில் 27ம் தேதி வரை கனமழை நீடிக்கும்
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் 27ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பசலனம் நீடித்து வருகிறது. இதனால் வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது. எனவே வரும் 27ம்தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
மேலும், அடுத்தவார இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், தி.நகர், கிண்டி, வேளச்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. எனவே, காலை முதல் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.