தமிழகத்தில் இந்த ஆண்டு ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அதிகபட்சமாக பதிவானது
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 102 டிகிரி வெயில், கரூரில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக, இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுலாக வெப்பம் நிலவியது. தமிழ்நாட்டில் தற்போது வெயின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தில் பெரும்பாலும் ஈரோட்டில் தான் அதிக அளவில் வெப்பம் பதிவானது. இந்நிலையில், முதன்முறையாக ஈரோட்டில் நேற்று 102 டிகிரியும், கரூர், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரி அளவில் வெயில் நிலவியது. கோவை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர், மதுரை மாவட்டங்களில் 97 டிகிரி வெயில் நிலவியது.
இருப்பினும் சராசரியாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையில் வெப்பம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சாவூர், சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, வேலூர், மதுரை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே, வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்தது.
அதில் அதிகபட்சமாக பேரையூர், காரியகோயில் அணை 30 மிமீ மழை பதிவாகியுள்ளது. சங்கரன்கோவில், பாப்பாரப்பட்டி 20 மிமீ, மாரண்டஹள்ளி, சூலூர், சின்னகல்லார், ஏற்காடு, பொள்ளாச்சி, கீரனூர் 10மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, 30ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.