பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கும்- விவசாயிகள் தகவல்

பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கும்- விவசாயிகள் தகவல்

சென்னை கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தவிலையில் மளிகை பொருட்கள் விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் பருப்பு வகைகள் விலை அதிகரித்து இருக்கிறது. சில மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய சந்தை வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது, உற்பத்தி பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு பருப்பு வரத்து குறைவாகவே இருந்து வருகிறது.

ஆந்திரா மாநிலம் மற்றும் தேனி, விருதுநகரில் இருந்து தான் பருப்பு அதிகளவில் வரும். தற்போது விளைச்சல் பாதித்துள்ளதால் வழக்கமான அளவை காட்டிலும் 30 சதவீத பருப்பு மூட்டைகளே கோயம்பேட்டுக்கு வருகின்றன.

இதனால் பருப்பு வகைகளில் விலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சமாக ரூ.7 வரை விலை உயர்ந்திருக்கிறது. அதேபோல முந்திரி, உலர் திராட்சை, மிளகு, மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்திருக்கிறது.