வெங்காய விலை: வியாபாரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

வெங்காய விலை: வியாபாரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

வெங்காயத்தை பதுக்கி வைத்தாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.தொடர் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்காலிகமாக வெங்காய விலை உயர்ந்துள்ளது.

அதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து வருவதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.