மொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது
புது தில்லி:நாட்டின், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில் சிறிது குறைந்துள்ளது.கடந்த அக்டோபரில் மொத்த விலை அடிப்படையிலான விலை வாசி உயர்வு 0.16 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய செப்டம்பர் மாதத்தில் 0.33 சதவீதமாக இருந்தது.
முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.உணவுப் பொருட்கள் அல்லாத பொருட்களின் விலை குறைந்ததாலும், உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்ததாலும், மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதாந்திர மொத்த விலை குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட, ஆண்டு பணவீக்கம், கடந்த 2018ம் ஆண்டில் 5.54 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு விகிதம், மதிப்பீட்டு மாதத்தில் 9.80 சதவீதமாகவும், உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வு விகிதம் 2.35 சதவீதமாகவும் உள்ளது.
தயாரிப்புப் பொருட்களின் மொத்த விலை பணவீக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில், மைனஸ் 0.84 சதவீதமாக உள்ளது. அதாவது அந்தப் பொருள்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.