பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யா.. புதின் முடிவால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம்!

பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யா.. புதின் முடிவால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம்!
பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யா.. புதின் முடிவால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம்!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அண்டை நாடான பெலாரசில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள் வழங்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட உதவி புரிந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

ரஷ்யா உக்ரைன் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் ஓராண்டைக் கடந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பெலாரசில் அணு ஆயுதங்களை நிறுவியதும், அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷியாவிடமே இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் பேசும்போது அவர் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறாது என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இதை அமெரிக்கா தனது ஆயுதங்களை ஐரோப்பாவில் நிலைநிறுத்துவதுடன் ஒப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்திருந்தது. சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனி நாடுகளாகப் பிரிந்ததால் அங்கிருந்து 1996ஆம் ஆண்டு வாக்கில் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷ்யா திரும்பப் பெற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு பெலாரசில் இருந்து ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெலாரசில் ரஷியா அணு ஆயுதத்தை நிலைநிறுத்த இருப்பதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தொடர்பான ரஷ்யாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் டேனிலோவ் பேசுகையில், பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷ்யா வைத்துள்ளதாகவும், ரஷ்யா மீதுள்ள பயத்தினாலேயே பெலாரஸ் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.