ஹத்ராஸில் நடந்த பாலியல் வன்கொடுமை விவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரும் அப்பாவிகள் என அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்
ஹத்ராஸில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு பேரும் அப்பாவிகள் என அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கடந்த 20 நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டாகி, முதுகுத் தண்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் இரண்டு வாரத் தொடர் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த பிறகு தான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் இதே போன்ற தொடர் குற்றங்கள் நடப்பது தடுக்கப்படவேண்டும் என்றும் பலதரப்பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு எதிராகவும் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாரங்கியைச் சேர்ந்த ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா வீடியோவில் பேசியிருப்பதாவது, “ஹத்ராஸ் விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேரும் அப்பாவிகள். அவர்களில் ஒருவரை பாதிக்கப்பட்ட பெண் காதலித்துள்ளார், சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண்தான் இளைஞனை வயல்வெளிக்கு அழைத்திருக்க வேண்டும். இந்தச் செய்தி ஏற்கெனவே அந்த ஊர் மக்களுக்குத் தெரியும். சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி சேனல்களிலும் வெளியாகியுள்ளது. அந்தப் பெண் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்க வேண்டும். எனவே அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இது போன்ற பெண்கள் குறிப்பிட்ட சில இடங்களில் தான் இறந்து கிடக்கின்றனர். கரும்புத் தோட்டம், திணை வயல்கள் அல்லது புதர்களில் கிடக்கிறார்கள். ஏன் இவர்கள் நெல் வயலிலோ கோதுமை வயலிலோ இறந்துபோவதில்லை? இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரை கைது செய்த நான்கு பேரையும் விடுவிக்கவேண்டும். நிச்சயமாகச் சொல்கிறேன் அவர்கள் நிரபராதிகள். அவர்களை விடுவிக்காவிட்டால் மன ரீதியான துன்பத்தை அனுபவிப்பார்கள். இழந்த அவர்களின் இளமையை யார் திருப்பித் தருவார்கள். அரசாங்கம் அவர்களுக்கு இழப்பீடு வழங்குமா?” எனப் பேசியுள்ளார்.
இவரின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, “ ஸ்ரீவஸ்தா, ஒரு கட்சியின் தலைவர் என அழைப்பதற்கு முற்றிலும் தகுதியில்லாதவர். அவர் தன் முதிர்ச்சியற்ற மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கருத்துக்கு எதிராக நான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தா இதே போன்று பல முறை சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளினாலேயே பிரபலமானவர். உத்தரப்பிரதேசத்தில் பல மாவட்டங்களில் மொத்தம் 44 குற்றவியல் வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.