சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது!

சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது!

சென்னை: சென்னை அமைந்தகரையில் தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சலைட் பயங்கரவாதி ஒருவன் பணி புரிந்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சிலிகுரி என்ற இடத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி அம்மாநில போலீசாரால் இவன் கைது செய்யப்பட்டவன் என்றும், அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியில் வேலைக்கு சேர்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் பிடிபட்ட அந்த வாலிபரை போலீசார் அமைந்தகரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவனது பெயர் கந்தர்பதாஸ் (24) என்பது தெரிய வந்தது. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கந்தர்பதாஸ் எனக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளான்.

ஆனால் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்ட சிலருடன் கந்தர்பதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து கியூ பிரிவு போலீசாரும் கந்தர்பதாசிடம் விசாரணை நடத்தினர். சென்னை போலீசார் மேற்கண்ட விசாரணைக்கு பின்னர், நக்சலைட் பயங்கரவாதியான கந்தர்பதாஸ், கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற கந்தர்பதாஸ், ஜாமீனில் விடுதலையான பின்னர் சென்னைக்கு வந்துள்ளான்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் அமைந்தகரையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்துள்ளான். இவன் சென்னைக்கு வந்ததன் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குற்ற வழக்கில் தொடர்புடைய நக்சலைட் அமைப்பை சேர்ந்த நபர் பிடிபட்ட சம்பவம் சென்னை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு பின்னர் கந்தர்பதாஸ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மேற்குவங்காள போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்று தெரிகிறது.

அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்தான் கந்தர்பதாஸ் பணிபுரிந்து வந்துள்ளான். இங்கு வட மாநிலத்தவர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள், ஆஸ்பத்திரியில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்களுடன் கந்தர்பதாஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவன் நான் ஒரு பயங்கரவாதி என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி பாதுகாப்பு அதிகாரியான ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராமதாஸ் அவர் பற்றிய தகவல்களை சேகரித்தார். யூடியூப்பில் தேடிப்பார்த்த போதுதான் கந்தர்பதாஸ் பற்றிய தகவல்கள் தெரிய வந்தது. இதன் பின்னர்தான் அதிகாரி ராமதாஸ் பயங்கரவாதியை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

கந்தர்பதாஸ் உல்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கந்தர்பதாஸ் சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து சென்னைக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.