ரூ.80 ஆயிரம் கோடியில் உருவான உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்

ரூ.80 ஆயிரம் கோடியில் உருவான உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்

ஐதராபாத்: காலேஸ்வரம் பல்நோக்கு உயர் மட்ட நீர்ப்பாசன திட்டம் என்பது தெலுங்கானா மாநிலம், ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டம் காலேஸ்வரத்தில் கோதாவரி நதியில் உருவாகியுள்ள உலகின் மிகப்பெரிய பல்நோக்கு உயர்மட்ட நீர்ப்பாசன திட்டம் ஆகும். இந்த திட்ட மதிப்பீடு ரூ.80 ஆயிரம் கோடி ஆகும்.

காலேஸ்வரம் பல்நோக்கு உயர் மட்ட நீர்ப்பாசன திட்டம், காலேஸ்வரம் கிராமத்தில் பிராணஹிதா மற்றும் கோதாவரி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் தொடங்குகிறது.

பிராணஹிதா நதியின் ஆண்டு சராசரி தண்ணீர் ஓட்டம் 280 டி.எம்.சி. ஆகும்.

இதில் சுமார் 240 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்தும் வகையில் காலேஸ்வரம் பல்நோக்கு உயர்மட்ட நீர்ப்பாசன திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக அதிகபட்சமாக 139 மெகாவாட் திறன் வாய்ந்த பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேறெங்கும் இப்படி பயன்படுத்தப்படவில்லை. 203 கி.மீ. கொண்ட உலகின் மிக நீண்ட கால்வாய் வழித்தடமும், உலகில் தினந்தோறும் 2 டி.எம்.சி. தண்ணீரை உயர் மட்டத்துக்கு எடுத்து செல்லும் திறன் கொண்டதும் இந்த திட்டம் மட்டும்தான். அடுத்த ஆண்டு முதல் 3 டி.எம்.சி. தண்ணீரை எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாய நிலத்துக்கு நீர்ப்பாசனத்துக்காக கோதாவரி நதியில் தண்ணீரை 618 மீட்டர் உயரம் வரை எடுத்துச்செல்வது இதுவே முதல் முறை.

இந்த திட்டத்தின்மூலம் 45 லட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் இரு போக சாகுபடிக்கு நீர்ப்பாசன வசதி பெறும். இதற்காக 169 டி.எம்.சி. தண்ணீர் பயன் படுத்தப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் தினமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 40 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்தப்படும். இதில் 1 கோடி மக்கள் வாழ்கிற ஐதராபாத் மாநகரின் குடிநீர் தேவை சந்திக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மெடிக்கட்டா என்ற இடத்தில் நேற்று காலை நடந்த கோலாகல விழாவில் இந்த திட்டத்தை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தொடங்கி வைத்தார்.

விழாவில் கவர்னர் இ.எஸ். எல்.நரசிம்மன், மராட்டிய முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்- மந்திரி ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.