சென்னையில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னையில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தாம்பரம்: சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம், எஸ்.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் வளர்மதி (வயது 36). இவர், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவருடைய கணவர் மகரஜோதி(41). அதே ஆஸ்பத்திரியில் எலும்பு பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ரிஷித் என்ற மகனும், 4 வயதில் ஓமிஷா என்ற மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மகன் ரிஷித், சைக்கிளில் பள்ளிக்கூடம் செல்லக்கூடாது என வளர்மதி கூறினார்.

ஆனால் அதையும் மீறி நேற்று ரிஷித் பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த டாக்டர் வளர்மதி, தனது வீட்டில் படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.