இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் இன்று
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மைதானத்தில் காணப்பட்ட ஈரப்பதம் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் விடப்பட்டது. 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி இரு அணிகளுக்குமே உள்ளது.
டாஸ் மட்டும் வீசப்பட்டு கைவிடப்பட்ட குவாஹாட்டி ஆட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட அதே 11 வீரர்களையே இந்திய அணி நிர்வாகம் இன்றும் களமிறக்கக்கூடும்.
ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் அவருக்கு ஜோடியாக அனுபவ வீரரான ஷிகர் தவணை களமிறக்குவதா? இல்லை சிறந்த பார்மில் உள்ள கே.எல்.ராகுலை களமிறக்குவதா என்ற கேள்வி அணி நிர்வாகம் முன் எழும். இதனால் சிறந்த திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே தனது இடத்தை ஷிகர் தவண் வேரூன்றிக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியான நிலை உருவாகி உள்ளது.
ஹோல்கர் மைதானத்தில் இதற்கு முன்னர் இந்தியா - இலங்கை அணிகள் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் மோதின. இரு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் இரு அணிகளும் இதே மைதானத்தில் சந்திக்கின்றன.