அறிவித்த நாளில் வெளியாகாத மிக மிக அவசரம்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் 'மிக மிக அவசரம்'. ஸ்ரீபிரியங்கா, முத்துராமன், ஹரிஷ், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில், இயக்குநரும், அரசியல்வாதியுமான சீமான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். பெண் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற லிப்ரா நிறுவனத்தை சேர்ந்த ரவீந்தர் சந்திரசேகர் அக்டோபர் 11-ந்தேதி மிக மிக அவசரம் திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தார்.
ஆனால் படத்துக்கு போதுமான தியேட்டர்கள் ஒதுக்காததால் தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து ரவீந்தர் சந்திரசேகர் கூறும்போது, "மிக மிக அவசரம் படத்துக்கு ரூ.85 லட்சம் செலவிட்டுள்ளேன். 11-ந்தேதி திரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்த நிலையில் தமிழகம் முழுவதும் 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளனர். இதனால் படம் ரிலீசை தள்ளி வைத்துள்ளேன்.
சிறுபட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்க மறுப்பது நியாயமல்ல. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்வேன். அரசிடமும் மனு கொடுப்பேன்" என்று கூறியுள்ள நிலையில், படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, இதுபோன்ற நடவடிக்கைகள் சிறிய படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
                        
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        