தொழில் அதிபரை மணந்தார் நடிகை காஜல் அகர்வால் திருமணம்
தொழில் அதிபரை மணந்தார் நடிகை காஜல் அகர்வால் திருமணம்
தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, பாயும் புலி, கோமாளி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் தொழில் அதிபர் கவுதம் கிட்சுலு என்பவருக்கும் திருமணம் முடிவானது. கவுதம் கட்டிடங்களில் உள் அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. காஜல் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் “நானும் கவுதமும் திருமணம் செய்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா தொற்று காலம் இந்த சந்தோஷமான தருணத்தை அளித்து இருக்கிறது. நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும் நேற்று மாலை மும்பையில் எளிமையாக திருமணம் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் முன்னிலையில் காஜல் அகர்வால் கழுத்தில் கவுதம் தாலி கட்டினார். அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பதிவு செய்தார்கள். திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்து உள்ளார்.
தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன.
                        
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        