சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி
சின்னஞ்சிறு வயதில் தந்தையுடன் சேர்ந்து சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா , ஜாம்பவான் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் களம் இறங்கியபோது, மைதானத்தில் இருந்து சச்சின். சச்சின் என முழக்கமிட்ட பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் ஒருவர் ஷஃபாலி வர்மா.
சச்சின் தனது கடைசி ரஞ்சி போட்டியை ஹரியானாவில் 2013ஆம் ஆண்டு விளையாடியபோது, 9 வயது சிறுமியாக போட்டியை நேரில் பார்த்து ரசித்தார் ஷஃபாலி. அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார், அடுத்த 6 ஆண்டுகளில் சச்சினின் சாதனையை முறியடிப்போம் என்று.
ஹரியானாவைச் சேர்ந்த 15 வயது இளம் நாயகி ஷஃபாலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில், குறைந்த வயதில் அரை சதம் அடித்த இந்தியர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். டெண்டுல்கர் 16 வயதில் அரை சதம் அடித்ததே இந்தியரின் சாதனையாக இருந்தது.
தனது 9 ஆவது வயதில், 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு பேட்டிங்கில் தன்னை பட்டை தீட்டினார். அதிரடி ஆட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சீனியர் பெண்கள் அணிக்கு தேர்வானார்.
தென்னாப்ரிக்காவுடனான 20 ஓவர் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைதொடங்கிய ஷஃபாலி, இரண்டே மாதத்தில் புதியசாதனையை நிகழ்த்தி அனைவரது பார்வையையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.