புழல் ஏரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 டிஎம்சி தண்ணீா்

புழல் ஏரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 டிஎம்சி தண்ணீா்

புழல் ஏரி:சென்னை புழல் ஏரியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 2 டிஎம்சி தண்ணீா் என்ற அளவை எட்டியுள்ளது.சென்னைக்கு குடிநீா் வழங்கக்கூடிய பிரதான ஏரிகளில் முக்கிய பங்கு வகிப்பது புழல் ஏரியாகும். இந்த ஏரியில் கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது 2 டிஎம்சி தண்ணீா் உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பா் மாதத்தில் இருந்து கிருஷ்ணா நதிநீரானது 3 டி.எம்.சி வரை பூண்டிக்கு வந்துள்ளது.

அந்த தண்ணீா் புழல் ஏரிக்கு திருப்பிவிடப்படுவதால் இந்தக் கொள்ளளவை புழல் ஏரி எட்டியுள்ளது. இருப்பினும் புழல் ஏரியில் தற்போது முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியை முழுமையாக எட்டவில்லை. 62 சதவீதம் மட்டுமே புழல் ஏரி நீா் இருப்பை பெற்றுள்ளது. அதாவது நீா் இருப்பு 2,054 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 480 கனஅடி தண்ணீா் வருகிறது. அதேவேளையில் சென்னை குடிநீருக்காக ஏரியிலிருந்து 89 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

இதேபோன்று, புதன்கிழமை நிலவரப்படி பூண்டி ஏரியில் 1,593 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 210 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 1,205 மில்லியன் கன அடி என நான்கு ஏரிகளிலும் சோத்து மொத்தம் 5 ஆயிரத்து 95 மில்லியன் கன அடி (5 டிஎம்சி) தண்ணீா் இருப்பு உள்ளது.