ஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்
ஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள் 

.அரிசியைத் தவிர சோளம் கம்பு கேழ்வரகு போன்ற தானியங்களையும்  கிராமப்புற மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றையும் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். தொல்காப்பியத்தில் இளம்பூரணர் உரையில் கூறும்போது, நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார்

காலை உணவுகள் 


காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 10 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நீங்கள் உண்ணும் முதல் உணவு, உங்கள் குடலை பாதிக்காத அமிலச் சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருக்க வேண்டும். எனவே பால், காபி, டீ என்று சாப்பிடுவதை விட, உப்புமா, இட்லி, பொங்கல் போன்ற உணவுகளை எடுத்துகொள்வது சிறந்தது. இந்த உணவுகளை தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும் சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.

குறிப்பாக வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான சோள உப்புமா,கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை போன்ற உணவுகளை காலையில் உண்பதன் மூலம் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

மதிய உணவுகள்

மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.  மதிய நேரத்தில் உடலில் உள்ள ஜீரண நீர்கள் உணவை நன்றாக ஜீரணிக்கும். எனவே மதிய உணவில் கிழங்குகள், பழ வகைகள், பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள், தயிர், மோர் மற்றும் வறுத்த பொரித்த உணவுகள் உடல் உழைப்புக்கு ஏற்றவிதத்தில் சாப்பிடலாம். மேலும்,  பிரியாணி, மீன், இறைச்சி போன்ற உணவு வகைகள் மதிய நேரத்தில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம். அப்போதுதான் அவை செரிமானமாவதற்கான நேரம் உடலுக்குத் தாராளமாகக் கிடைக்கும்.

இரவு உணவுகள்

இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளையே, மாலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும். குறிப்பாக சுண்டைக்காய், துமட்டிக்காய், தூதுவளை போன்றவற்றில் தயார் செய்த வற்றல்களை இரவு உணவுடன் சாப்பிடுவது சிறந்தது.  தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.

பொதுவாக உணவுகளை வயிறு நிரம்பும் வரை உண்ணக்கூடாது. இரைப்பையில் பாதி அளவுக்கு சாப்பிட வேண்டும், கால் பகுதிக்கு திரவ உணவுகளுக்கும், மீதமுள்ள கால் பகுதியை இரைப்பையில் உள்ள காற்று மற்றும் ஜீரண நீர்கள் உணவை ஜீரணிக்க உதவும் வகையிலும் காலியாக விட வேண்டும்.